Friday 12 December 2014

பள்ளி முதல்வர்.2

அன்று பாதி தான் தட்டச்சு செய்ய முடிந்தது. மீதி இதோ
**************************************************************

அம்மா தலைமைஆசிரியர் என்பதால் அம்மாவின் தோழமைகைள் பெரும்பாலனவர்கள் தலைமை ஆசிரியர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தனது உதவி ஆசிரியர்கள் பற்றிய ஒரு நீண்ட குற்றப்பட்டியல்களை வாசித்துக் கொண்டே இருக்கக் கேட்டிருக்கிறேன். மேலும் தனது கீழ்பணிபுரியும் ஆசிரியர்களைத் தட்டிக் கேட்க இயலாதவர்களாகவும், எதிர்க்கத் துணியாதவர்களாகவும் அதே சமயம் அவர்களோடு இணங்கிப்போகத் தெரியாதவர்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனால் எங்கள் பள்ளி முதல்வரிடம் அந்தப் பேச்சுக்கே இடமில்லை.

எனக்கே ஒரு ஆச்சரியம் உண்டு. ஒரே நபர் எப்படி நெகிழ்வானவராகவும் கண்டிப்பு மிகுந்தவராகவும் இருக்க முடியும்? சூழலுக்கு தகுந்தார்போல் இயங்கும், அல்லது இயக்க வைக்கும் சூட்சுமத்தை அவர் யாரிடம் கற்றிருப்பார்?

எல்லாப் பிறந்தநாளிலும் அவர் தன் வலது கரத்தை என் தலையில் வைத்து காட் பிளஸ் யூ மை சைல்ட் என்று சொல்லி இனிப்புகள் எடுத்துக் கொண்டு ஒரு வாழ்த்து அட்டையில் கையெழுத்திட்டுத் தருவார். அவரிடம் அப்படி ஒரு வாழ்த்து பெறவே வருடத்திற்கு இரண்டு பிறந்த நாள்கள் வரக் கூடாதா என்ற எண்ணம் ஏற்படும் . அவரின் வாழ்த்து அவர் இதயத்திலிருந்து கிளம்பி நமது ஆன்மாவை நிறைக்கும். உண்மையான அன்பும் நேசமும் இருப்பவர்களால் தான் அப்படி ஒரு வாழ்த்து தர முடியும்

சென்ற பிறந்த நாள் அன்று அந்தப் பள்ளியில் நான் இல்லாத காரணத்தால் அவரின் வாழ்த்து கிடைக்காமல் போனது குறித்து இப்போதும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

அவரிடம் நல்லபெயர் மற்றும் நன்மதிப்பு வாங்கிய மாணவிகளில் நானும் ஒருத்தி.

ஏனோ எனது இப்போதையப் பள்ளியில் சில மாணவர்களின் அடாவடித்தனங்கள், மற்றும் அதனால் ஆசிரியர்கள் அடையும் மன உளைச்சல்களைப் பார்க்கும் போதெல்லாம் அவரிடம் இது போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

எப்போதும் மாணவர்கள் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், காதலிப்பதும், பிற மாணவிகளை துயரத்திற்குள்ளாக்கும் போதும் எனக்கு இந்த துன்பங்கள் நேரவில்லை என்பதாலேயே என்னால் அகன்று போக முடியவில்லை. மனம் பரிதவிக்கிறது. சிறுமியான என்னால் என்ன செய்ய இயலும்? அவர்களுக்கான ஒரு பிரார்த்தனை செய்வதைத்தவிர. எல்லோரும் நல்லபடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

கட்டணம் முறையாகக் கட்டாதவர்க்ள், சமுதாயத்தில் வளம் குன்றியவர்கள், மோசமான சூழ்நிலையிலிருந்து வருபவர்கள், மிக மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்,  என்று அங்கு இருந்த மாணவர்களில் பலவகை இருந்தார்கள் தான். ஆனால் எல்லோரையும் கவரக்கூடியதாகவும் அனுசரித்துப் போகக் கூடியதாகவும், ஆற்றுப் படுத்தக் கூடியதாகவும் இருந்தது அவரின் செயல்பாடுகள்.

 மிக உயர்ந்த நிலைக்கு வந்தபின் இந்த வலைதளம் பற்றியும் அவரைப்பற்றிய இந்த எனது எண்ணங்கள் பற்றியும் அவரோடு பகிர்ந்து கொள்வேன். ஒரு நல்ல மாணவி தன் செயல்களால் தான் தன்னை நிரூபிக்க வேண்டுமே தவிர  சொற்களால் அல்ல என்பதை உணர்கிறேன்.



இந்த வலை தளம் பற்றி அவருக்குத் தெரியாது. அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால் இனிவரும் நாளில் நான் சமுதாயத்தில் மிக உயர்ந்த பதவியை அடையலாம். அப்படி நான் எதிலேனும் ஒரு நிலையில் உச்சத்தை அடைந்தவள் ஆவேன் என்பதுதான் அவருக்கு நான் தரும் பரிசு....காணிக்கை.








                                                                

( இன்னும் நிறைய சொல்லலாம் தான்...ஆனால்.. நேரம்) 

No comments:

Post a Comment